‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி

Maynmai
7 min readDec 16, 2020

யாழினி ட்ரீம், ஏஞ்சல் குயின்ரஸ்

English Version Here

முரண்பாடுகள்

இலங்கையின் கொழும்புநகரில் 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஒரு இளம், தன்பாலீர்ப்பு கொண்ட தமிழ்ச் சிறுவனை மையமாகக் கொண்டு ஷியாம் செல்வதுரை எழுதிய ஒரு தைரியமான, புதுமையான நாவல் ‘ஃபன்னி பாய்’ (விசித்திரமான பையன்). இடையிலிங்க, திருநர் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு நாவல் பெரிய திரைக்குச் செல்வதை வைத்துக்கொண்டு, எங்கள் சமூகங்களைச் சுற்றியுள்ள தவறான கதைகளை உடைக்க மீண்டும் ஒரு முறை நாங்கள் செயலூக்கம் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஃபன்னி பாய் நாவலின் சக்திவாய்ந்த கதைசொல்லல் முறை உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் மௌனமாக்கப்பட்ட தமிழ் பேசும் அனுபவங்களில் ஒன்றை எடுத்துச் செல்கிறது. பண்டைய குயர், திருநர் மற்றும் இடையிலிங்கத் தமிழ், முஸ்லீம் வரலாறுகள் இருந்தபோதிலும், காலனித்துவம், சாதிவாதம், மத ஆணாதிக்கங்கள், சர்வாதிகாரவாதம், பொருளாதார சுரண்டல், பேரழிவு முதலாளித்துவம் மற்றும் போர் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல்களால் நமது சமூகங்களுக்கான இடம் பயங்கரமாகக் குறுகிவிட்டது

1994 ஆம் ஆண்டில் ஃபன்னி பாய் வெளியிடப்பட்ட நேரத்தில், உண்மையான எல்ஜிபிடிகுஐ+ தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் இல்லை என்று ஒரு தவறான இருமைக்கட்டமைப்பு வெளிவந்தது. நீங்கள் இந்த வழியில் “வித்தியாசமான” அல்லது “குயர்” அல்லது “விநோதமானவர்” என்றால், நீங்கள் மேற்கத்தைய சமூக வாழ்க்கைமுறைகளால் கவரப்பட்டு மாறிவிட்டீர்கள் என்ற கற்பிதம் உருவாகியிருந்தது.

இந்தவகை எடுத்துரைப்பானது போரின் வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இன்டர்செக்ஸ், டிரான்ஸ் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களிளுக்கு மேலும் வேதைனையை உண்டு பண்ணியது. தணிக்கை, துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் கொலைகளை இந்த இருமை எதிவு நியாயப்படுத்தியது. மேலும் எம் சமூகங்களுக்குள் தனிமை, சுய வெறுப்பு, அவமானம், துருவப்படுத்தல் மற்றும் துண்டு துண்டாதல் பற்றி எரிவதற்கு இது வழிவகுத்தது. எங்கள் சமூகங்களுக்குள் மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் சாதி, மத மற்றும் வர்க்க அம்சங்கள் பற்றிய நுண்ணறிவு ஃபன்னி பாய் நாவலில் இல்லாவிட்டாலும் கூட, ஷியாம் செல்வதுரை இந்த தவறான இருமைஎதிர்வைத் தகர்த்து, மிகவும் தேவைப்பட்ட ஒரு வெளியைத் திறந்துவைத்தார்.

சமீபத்தில், இந்தக் கதை தீபா மேத்தாவின் தழுவல் மூலம் நாவல் வடிவத்தில் இருந்து திரைப்பட வடிவத்துக்குத் தாவிச்சென்றிருக்கிறது. திரைப்படம் தமிழர் சமூகங்களின் மிகவும் வேதனைக்குரிய நெருக்கமான அம்சங்களைக் குறுக்கிட்டுச் செல்வதன் காரணத்தால், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட புகழாரங்களும் விமர்சனங்களும் அதையொட்டி எழுந்திருப்பதைக் காண்கிறோம். தமிழ்பேசும் குயர், திருநர், இடையிலிங்க சமூகங்களுக்கிடையே வருத்தம்தரும்வகையில் எதிரொலிக்கும் இவ்விமர்சனத்தின் மையச்சரடு பின்வரும் மூன்று விடயங்களை மையப்படுத்துகிறது: மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடிகர் பிரதிநிதித்துவம், தமிழ் மொழி மோசமான முறையில் உபயோகிக்கப்பட்டிருப்பது, மேலும் வரலாற்றைத் திரிபுபடுத்திக் காண்பித்தமை.

இவை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தகுந்த சரியான கரிசனங்கள் என்ற போதிலும், தீவில் உள்ள எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களிடம் கூட்டு ஒன்றிணைவையும் பொறுப்புணர்வையும் நிரூபிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் பலரும் தவறியிருப்பதை எங்கள் சமூகங்கள் கண்ணுறுகின்றன. தோல்வியுற்ற இந்தக் கூட்டு ஒருங்கிணைவின் விளைவுகளாக துருவப்படல், ஓரங்கட்டப்பட்ட மக்களை மேலும் மௌனமாக்குவது, மற்றும் சமீபத்திய சூறாவளியால் அதிகரித்திருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வோரின் உள மற்றும் உடல் பாதுகாப்புகளை உறுதிசெய்யத் தவறும் நிலை ஆகியவற்றைச் சொல்லமுடியும். இந்த சூழ்நிலைகள் பயங்கரமாகத் தீவிரமடையும் திறனைக்கொண்டுள்ளன. எங்களுடைய தமிழ்ச் சமூகங்களுக்குள் கலைகள், நலம் பெறுதல், கூட்டு ஒன்றிணைவு மற்றும் விடுதலை ஆகியவற்றில் எவ்வளவு அக்கறை மற்றும் கவனம் தேவை என்பதை இந்த கவலைக்கிடமான சூழலில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வித்தியாசமான தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் தீவிரமான நிலவரங்கள் சர்வாதிகார, பாசிச நிலைமைகளை எதிர்கொள்ளுவோருடனான கூட்டு ஒருங்கிணைவுக்கான பல நுண்ணறிவுகளை நல்க வல்லவை. ஆனால், தொடக்கம் கருதி சில ஆலோசனைகளை இந்த விவகாரத்தில் தம்மை இணைத்துக்கொள்வதைத் தேர்வாய்க்கொள்ளும் பால்மாறா எதிர்பாலீர்ப்புள்ள தமிழர்களுக்குச் (cis straight Tamils) சொல்ல விழைகிறோம். எங்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தனிமைப்படுத்துதல், கொலைகள், நோய்கள், மற்றும் தற்கொலைகளுடன் உடந்தையாக நிற்க விரும்பாவிட்டால்:

  • எல்ஜிபிடிகுஐ+ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அன்பு, கவனிப்பு மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்
  • இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைகளை மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை நிரூபியுங்கள்.
  • திரைப்படத்திற்கான உங்கள் எதிர்வினையை — அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி — எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு, மேன்மை, மற்றும் விடுதலைக்கான அபிலாஷைகளை அங்கீகரித்தே முன்வையுங்கள். குறிப்பாக போருக்குப் பின்னராக, பொருளாரதாரச் சுரண்டல், அனர்த்தங்கள், வன்முறையென பல்வேறு இடர்களுக்குள்ளும் மேன்மை நோக்கிப் போராடும் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை மனம் கொள்ள வேண்டும்.

நிலவரங்கள்

திருநர், குயர் மற்றும் இடையிலிங்க மக்கள் பொதுவெளியில் வெளிப்படையாக இருப்பதென்பது, அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மிகவும் கடினமான விடயம். தாக்குதல், துன்புறுத்தல், அவதூறு என்பவற்றுக்கு மேலாக எம் சமூகங்கள் வீட்டுவசதி, கல்வி, கூட்டு வழிபாடு மற்றும் மருத்துவ பராமரிப்பு பெற்றுக்கொள்வதில் தடைகளை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான எல்ஜிபிடிகுஐ+ மக்கள் ஒளிவுமறைவாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் தமது கதைகளைச் சேர்க்கவும், ஒருங்கிணைக்கவும், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாத இருட்டடிப்புக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறது.

பல தசாப்தங்களாக போர், அனர்த்தங்கள், சர்வாதிகாரவாதம், மத ஆணாதிக்கம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றால் குறுக்கப்பட்டிருந்த இந்த வெளி, “தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் ≠ எல்ஜிபிடிகுஐ+” என்ற சமன்பாட்டால் மேலும் இறுகிச் சுருங்கிவிடுகிறது. போர்க்காலப்பகுதியில் எல்ஜிபிடிகுஐ+ மக்கள் போர்க்குற்றங்கள், இராணுவமயமாக்கல், பொலிஸ் வன்முறை மற்றும் இலங்கை அரசால் இலக்குவைக்கப்படல் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்தம் துணை இராணுவங்களின் தந்தைமையவாத கட்டுக்காவல் மற்றும் துன்புறுத்தலையும் சேர்த்தே எதிர்கொண்டனர்.

இந்தக் காலப்பகுதியில், மற்றொரு துருவமுனைப்பு — மற்றொரு தவறான இருமைக்கட்டமைப்பு — உருவாகிற்று: ஒன்றில் நீங்கள் உங்கள் வித்தியாசத்தை (ங்களை) அமைதிப்படுத்தித் தமிழ் தேசியவாதத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து உங்கள் விசுவாசத்தை பெருக்கிக் கொண்டீர்கள், அல்லது துரோகியாக அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டீர்கள். உண்மையில் பார்க்கப்போனால் யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை அழித்தொழிக்க முனையும் பல்வேறு வன்முறைச் சக்திகளை பல்வேறு சிக்கலான வழிகளில் எதிர்கொண்டாக வேண்டியிருந்தது.

போர், கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கீழ் சமாளித்தல், உயிர்பிழைத்தல் மற்றும் எதிர்ப்பு உத்திகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மை வேரூன்றத் தொடங்கின பன்முக எதிர்ப்பின் புத்திசாலித்தனமான, இரகசிய வேலைக்கு தவறான தகவல்களை எதிர்கொள்ளும் திறன், பரஸ்பர உதவி, உடல்நலம்/ஆரோக்கியத்தை வளர்ப்பது, துருவமுனைப்புகளைத் தணித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல், வேறுபாடுகளைக் கடந்த இரகசிய கூட்டு ஒருங்கிணைவு வலையமைப்புகளை உருவாக்கிப் பராமரித்தல் என்பவற்றில் திறன்கள் தேவைப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களின் உயிர்வாழ்வையும் போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டும் என விழையும் புலம்பெயர்ந்த அல்லது தென்னிலங்கையின் சில பிரதேசங்களைச் சேர்ந்தோரைப் பொறுத்தவரை கூட்டு ஒருங்கிணைவு (solidarity)என்பது மிகவும் துல்லியமாக இருக்கவேண்டும். இந்த சூழல்களில் ஒரு சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களுக்கான அன்பு, பாதுகாப்பு, மேன்மை மற்றும் விடுதலையை மையமாகக் கொண்ட வகையில் ஃபன்னி பாயைச் சுற்றியுள்ள எங்கள் உரையாடல்களை தொடர்ந்து ஆழப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கூட்டு ஒருங்கிணைவு தொடர்பான பின்வரும் உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். இவ்வழி செயற்படும் போது, அனைத்து தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை மட்டுமன்றி, ஆப்ரோ-சிலோனீஸ், வன்னியால எத்தோ மற்றும் பிற துன்புறுத்தப்பட்ட, சிறுபான்மைப்படுத்தப்பட்ட எல்லா மக்களையும் விடுதலையை நோக்கி நகர்த்த முடியும், ஒற்றுமையுடன் வேரூன்றிய சூழலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

வித்தியாசமான மக்களே, நாம் உங்களை நேசிக்கிறோம். உங்களுடைய தைரியம், மீளெளுகை, திறமை, மற்றும் மந்திரத்தன்மைக்கு நன்றி. அதிசிறப்பான விடுதலை எதிர்காலங்களை நோக்கி பண்டைய மதிநுட்பங்களைக் கடத்தும் நமது புனிதமான பாத்திரங்களை மீண்டும் பெறுவோம்.

வன்முறை, ஒடுக்குமுறை, துருவப்படுத்தல் மற்றும் சர்வாதிகாரத்துடன் போட்டியிடும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணவு நோக்கிய உதவிக்குறிப்புகள்

துல்லியம் மற்றும் தொடர்ச்சியைப் பயிற்சி செய்தல்: ஒரு சம்பவம், உடனடி ஆபத்து அல்லது அவசரநிலை இருக்கும்போது முன்முயற்சி எடுக்க வேண்டும்: “விஷயங்கள் தீவிரமானவை / கடினமானவை / ஆபத்தானவை என்று கேள்விப்பட்டேன், நாங்கள் ஆதரிக்கக் கிடைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் இன்ன இன்ன விதங்களில் உதவமுடியும். ” நீங்கள் எதை வழங்க முடியும் என்பதில் நடைமுறைச் சாத்தியத்தை கவனம் கொள்ளுங்கள்: மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது, தவறான வாக்குறுதிகள் ஆபத்தானவை. மக்கள் வன்முறையிலிருந்து தப்பிப்பிழைக்கும்போது, போலி வாக்குறுதிகள் அவர்களை அவதியுறச் செய்யும், துண்டு துண்டாக்கி நம்பிக்கையை ஒழிக்கும். உங்கள் வாக்குறுதிகள் குறித்துத் துல்லியமாக இருங்கள்: உங்களுடைய தரப்பு எதை நியாயமுறையில் வழங்கமுடியும் என்பதை அறிந்து வைத்திருங்கள். “இவை எனது திறன்கள். இவற்றை என்னால் இலகுடன் வழங்க முடியும். ஆனால் வேறு சிலவற்றை செய்வது எனக்குக் கடினமாக இருக்கும், ஆனால் முயன்று பார்க்கலாம். இதுதான் என் அனுபத்தின் எல்லை. இங்கே நான் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் என் குறைபாடுகள்.

கவனிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்குதல்: நாம் சர்வாதிகார ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புக்குக் கீழ் அடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுய பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஏற்படுவது கடினமாக இருக்கலாம். கவனிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதென்பது மேல் / கீழ் செயல்பாட்டு முறைகளில் தங்கியிருக்காத ஒரு பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு குழுவுடன் அநாமதேயமாக பணிபுரிந்தாலும், கவனிப்பு, தீவிர ஒப்புதல் மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கலாம். அர்ப்பணிப்பைச் செய்ய முடியாத ஒரு நிலையில், அல்லது தவறிழைத்த ஒரு நிலையில் நேர்மையுடன் நபர்கள் இருக்க முடிகிற ஒரு சூழலானது நீங்கள் ஒருங்கிணைவுடன் இருக்கிற எல்லொருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இன்றியமையாதது.

திறன்கள் / தகவல்களைப் பகிர்தல், பரிமாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுப்பதை ஆதரித்தல்: சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அமைப்புரீதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ள திறன்கள், தகவல்கள் மற்றும் “நிபுணத்துவம்” ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த அணுகலை ஜனநாயகமயமாக்கும் பொறுப்பு அணுகல்வாய்ப்பு மற்றும் சலுகை உள்ளவர்களுக்கு உண்டு. பட்டேர்னலிஸ (paternalism) நிலைப்பிரகாரம், “நிபுணத்துவம்” உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அணுகல்வாய்ப்புக் கொண்ட நபர்கள் ஒடுக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதாகச் சொல்லி முடிவுகளையும் எடுப்பதைக் காணலாம். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்த மேற்சொன்ன இயங்குதளத்தை தலைகீழாக்குவதை வேண்டிநிற்பது. ஒடுக்கும் சக்திகளால் ஆகக்கொடூரமாகப் பாதிக்கப்பட்டோர் தம்மைக்குறித்து தகவலறிந்த முடிபுகளை எடுப்பதற்கு நம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் பரிமாறல்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கூட்டிணவுகள், உத்திகள் மற்றும் தாக்கத்தை வலுப்படுத்தமுடியும். துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் அபிலாஷைகளைப் பொறுத்து அவர்கள் எவ்வாறு தம் நோக்குகள் மற்றும் இலக்குகள் நோக்கி நகரமுடியும் என்பதற்கு அணுகல் வசதிகள் கிடைக்கப்பெற்ற நபர்கள் சிபாரிசுகளையோ அல்லது தெரிவுகளையோ வழங்குவதன் மூலம் உதவமுடியும். ஆனால், இறுதியாக முடிவு எடுக்கும் வலு அந்தச் சமூகத்தின் கரங்களிலேயே இருக்க வேண்டும்.

வேறுபாடுகளை மீறிய ஆதரவு, பரஸ்பர புரிந்துணர்வு, மேலும் ஒருங்கிணைவை வளர்த்தல்: எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களைப் பொறுத்தவரை, கடூரமான நிலைமைகள் மற்றும் தவறான தகவல்கள் பன்மைத்துவத்தை எவ்வாறு தடுக்கும் என்பதையும், அதற்கு பதிலாக வேறுபாடுகளைத் தூண்டி விரோதம் மற்றும் துருவமுனைப்பை வளர்ப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். பன்மைத்துவம் என்பது விடுதலைச் செயற்பாட்டில் அவசியமான, அழகான பகுதி. பன்மைத்துவ தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்குவது ஒரு நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை நோக்கிய பாதையாகும். பெரும்பாலும், சலுகை பெற்ற குழுக்கள் தாம் “சிறந்தவர்கள்” என்று கருதுபவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெயரளவிலான உட்சேர்ப்பு பாசாங்கில் (tokenization) பங்கேற்பார்கள். இந்த பெயரளவிலான-உட்சேர்ப்பு சில அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கி மேலும் மேலும் சிதைவுறுதலையும் நம்பிக்கையீனத்தையும் சமூகங்களிடையே வளர்த்துச் செல்லும். வன்முறையால் பாதிக்கப்பட சமூகங்களுக்கு நடைமுறையில் தேவைப்படுவதென்பது தொடர்புறவும், நலம் பெறவும், வேறுபட்ட அனுபவங்கள் நோக்குநிலைகளை மீறி ஒன்றுபடவுமான ஆதரவு தான்.

மீண்டோரை மையமாகக் கொண்ட ஒருங்கிணைத்தல் ஏற்பாடுகள்:தீங்கு குறித்த பகுப்பாய்வொன்றை நடத்துங்கள். தீங்கு மற்றும் வன்முறைகளால் அதிகம் பாதிப்புற்றோரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். ஒரு நபர் தனக்கு தீங்கு நேர்ந்ததெனப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​கவனத்துடனும் புரிதலுடனும் செவிமடுக்க வேண்டும். தீங்கிலிருந்து மீண்டோர் பாதிகாப்பான சூழல்களை அணுகவதற்கு வழிவகை செய்வதே முதன்மைச் செயற்பாடாக இருக்கவேண்டும். ஒரு நபருக்கு தீங்கு நேரும் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாவிட்டால், அச்சந்தர்ப்பத்தில் ஆதரவு என்பது பாதுகாப்பாகத் தீங்கைச் சுழியோடிக் கடப்பது பற்றிய ஆலோசனையாக இருக்க முடியும். ஒரு நபர் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளை விட்டு தப்பி வெளியேற முயற்சிக்கிறார் என்றால், அவர் தப்பிக்க உதவுவது மற்றும் பாதுகாப்பான தஞ்ச விடுதிகளைக் கண்டுபிடிப்பது போன்றவை கூட்டு ஒருங்கிணைவாகும். தீங்கு நேரும் நிலவரங்களில், எமது இலக்குகள் தடுப்பு, இடையீடு மற்றும் எதிர்கொள்ளல். சம்மத உடன்பாட்டையும் சுய நிர்ணயத்தையும் ஆதரித்தல் என்பது தீங்கு நேரும் சூழல்களில் மேலும் முக்கியமான ஒன்று. பாதுகாப்பைத் தேடும் நபர்கள் பாதுகாப்பு வசதிகள் உள்ளோரிடம் தங்கியிருக்க நேர்கையில் அதிகார நிலைமைகள் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல்: களத்திலிருந்து வரும் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியே கொண்டு செல்வது கூட்டு ஒருங்கிணைவில் மிகவும் உபயோகமான ஒரு உத்திதான், ஆனால் சில முன்னெடுப்புகள் இரகசியமாக இருக்கவேண்டியதும் அவசியமாகும். சில நேரங்களில், தீங்கற்றவர் என்ற அபிப்பிராயம் நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக ஒருக்கலாம். நீங்கள் கூட்டு ஒருங்கிணைவில் உள்ள சமூகத்தின் அன்றாட வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து ஒருங்கிணைவு உத்திகளையும் தந்திரோபாயங்களையும் வடிவமையுங்கள். கள மூலோபாயம் அற்ற ஊடக வெளிச்சம் சில நேரங்களில் இலக்குவைக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பற்ற ஆபத்து நிலவரத்துக்குள் தள்ளிவிடக்கூடும்.

வலிந்த ஒத்திசைவினூடு துணைபோதலை மறுத்தல்: தமிழ்பேசும் எல்ஜிபிடிகுஐ+ மக்களைப்போலவே, பல வேறு சமூகங்களும் தங்களுடைய ஒருங்கிணைப்பு வேலைகளை இரகசியமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளன. குரலெழுப்பும் சக்தியுள்ள, பரந்த வெளியில் செயற்படும் வாய்ப்புள்ள சலுகை நிறைந்த சமூகங்கள் இரகசியமாகச் செயற்படும் நிபந்தனையின் கீழிருப்போரின் செயற்பாடுகளை வலிந்த ஒத்திசைவின் மூலம் தமதாக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைந்தே இயங்கவேண்டியிருக்கும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணைவில் வேலை செய்யும்போது, இந்த வலிந்த ஒத்திசவை பாதுகாப்பை விட்டுக்கொடுக்காமல் மறுதலிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஒரு சமூகத்தின் சார்பில் அவர்களுக்காகப் பேசுவதற்கும், அல்லது அவர்களுடைய விருப்பங்கள், ஆய்வுகள், நுன்ணறிவுகளை வெளிக்கொணர்வதற்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு.

அதிகாரத்தையும் கூட்டுழைப்பையும் பரிசீலித்தல்: கூட்டு உழைப்பென்பது திறன்கள், நுண்ணறிவுகள், ஏலுமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தாக்கமிகு இடையீட்டை நிகழ்த்துவதற்கான ஒரு சந்த்தர்ப்பத்தை வழங்குகிறது. என்றபோதிலும், வழக்கத்திலிருக்கிற ஒரு பொதுவான சுரண்டல் நடைமுறை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். சலுகை மிகுந்த ஆதிக்க சமூகங்கள் தாம் கொண்டுநடத்தும் முன்னெடுப்புகள் மற்றும் இடையீடுகளுக்குள், ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பைச் “செருகிவிட்டு” “ஆதரவளித்து” “பெரிதாக்குவதன்” மூலம் ஒருவித செல்வாக்கைத் தேடிக்கொள்ள முனைவர். இந்த முனைப்பின் கீழ், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருப்பானது ஆதிக்க சமூகங்களின் செயல்களை நியாயப்படுத்துவற்கு துணைபோகும் நிலை ஏற்படுகிறது. இந்தவகையாக துணைபோகும் ஒத்திசைவை நல்க வேண்டிய அழுத்தத்தை உணரும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அருமந்த நேரத்தையும் சக்தியையும் தமது தேவைகளில் செலவிடுவதைத் தவிர்த்து வசதி வாய்ப்புள்ள ஆதிக்க சமூகங்களுக்காக விரயமாக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகின்றனர். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்தமாதிரியான அதிகாரப் பரிமாணங்கள் குறித்த உணர்திறனையும், அந்த சலுகை அதிகாரங்கள் தாக்கமுற்ற சமூகங்களின் மேம்பாட்டை நோக்கி எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்பட முடியும் என்ற தொடர்ந்த பரிசீலனையையும் கோரிநிற்பது.

— — —

ஏஞ்சல் குயின்ரஸ் வடக்கில் திருநர்களால் முன்னெடுத்து நடாத்தப்படும் சமூக அமைப்பான யாழ்ப்பாண திருநர் வலையமைப்பின் (JTN) ஸ்தாபக இயக்குநராவார். APTN (பாங்கொக்) அமைப்பின் 2020 ஆதரவு பயிலுநர் குழு அங்கத்தவராக, SOGIE பால்நிலைசார் மருத்துவ வசதிவாய்ப்புக்கான ஆதரவுச் செயற்பாட்டு நெறிமுறைகளை வளர்த்தெடுக்கும் பணியில் சமீபகாலமாக வேலைசெய்து வருகிறார். கடந்த மர்ர்ச் 2020இல் சங்கத் பெண்ணிய திறன் வளர்ப்பு பட்டறையில் பங்கேற்றிருந்தார். பல்வேறு ஊடக எழுத்துக்கள், தொலைக்காட்சி நேர்காணல்களை ஏஞ்சல் வழங்கியிருக்கிறார். கடந்தகாலத்தில் ஈக்வல் க்ரவுன்ட் (கொழும்பு) மற்றும் சாவிய அபிவிருத்தி நிறுவனம் (காலி) ஆகியவற்றில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழினி ட்ரீம் சுற்றுப்பயணக் கலை மரபில் வருகிற ஒரு நிகழ்த்துகலைக் கலைஞர், அமைப்பாளர், ஸோமாட்டிக்ஸ் பயிற்றுனர், மற்றும் ஆலோசகர். வன்முறையால் பாதிப்புறும் சமூகங்கள் நலமடையவும், அமைப்பாகவும், மேன்மைபெறவும் வேண்டி கலை உத்திகளைப் பாவிப்பதில் இருபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். கவிதை, அரங்கு, பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் தனித்த கலவையூடாக ஆன்மாவை அழைத்து அதன்வழி நடைமுறையை மாற்றியமைக்க முயல்பவர். மண், மனம், ஆன்மா மற்றும் கனவின் நிலங்களில் நீதி மூலமாக அமைதி நோக்கிய தேடலுக்கு இது வழிவகுக்கிறது. விடுதலை எதிர்காலம் நோக்கிய செயன்முறைகளுக்கு இடமளிக்கும் பண்பாட்டு வேலையின் நிறைவான மரபில் இருந்து யாழினி தன் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறார். ப்ரூக்ளின் ட்ரீம்வுல்ஃப் என்பதில் ஜென்டோக் லோன்வுல்ஃப் உடன் இணைந்த ஓரங்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் யாழினி விஷன் சேஞ் வின் அமைப்பில் ஆலோசகராகவும், எம்-ஸ்டூடியோ.ஒர்க் இன் இணை ஸ்தாபகராகவும், மேன்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்குகிறார்.

--

--

Maynmai

We are a Tamil-led, multi-ethnic, multi-racial formation responding to attacks on asylum.